அன்பான வாசகர்களே... வணக்கம்.

தமிழகத்தை உலுக்கிய மாபெரும் வெள்ளத்தை அடுத்து, நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலிகளும், பல லட்சம் கோடி ரூபாய்க்கு பொருட்சேதமும் ஏற்பட்டன. லட்சக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, பல லட்சம் பேரைப் பாதிப்புக்குள்ளாக்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகள்தான் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின.

இந்தப் பேரழிவுக்குக் காரணம்... நீர்நிலைகளையும், நீர்வழிப்பாதைகளையும் ஆக்கிரமித்ததுதான் என்பது ஊரறிந்த உண்மை. இதை உணர்ந்து, எதிர்காலத்தில் இத்தகைய பேரிடர் நிகழாவண்ணம் தடுக்கும் வகையில் முயற்சிகளை முன்னெடுக்க ‘நிலம்... நீர்... நீதி’ என்கிற திட்டத்தை அறிவித்திருந்தோம். இதற்காக விகடன் சார்பில், 1 கோடி ரூபாயை முதற்கட்ட நிதியாக ஒதுக்கினோம். இதையடுத்து, ஆர்வம் பொங்க இதில் கைகோத்த நம்முடைய வாசகர்கள்... இதுவரை ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு மேல் நிதியைக் குவித்துள்ளனர்.

`நிலம்... நீர்... நீதி’ மூலமாக என்னென்ன திட்டங்களை செயல்படுத்துவது, எப்படிச் செயல்படுத்துவது என்பதற்காக ஓர் ஆலோசனைக் குழு உருவாக்கப் பட்டிருப்பது குறித்து தெரிவித்திருந்தோம். இந்தக் குழுவின் முதற்கட்டக் கூட்டம் மற்றும் ஏரிகள் ஆய்வுப் பயணங்களின் அடிப்படையில், பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக, வண்டலூர் முதல் வாலாஜாபாத் வரை நீளும் நிலப்பரப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான ஏரிகளில், சில ஏரிகளின் நிலை மிகமிகப் பரிதாபமாக இருப்பதைக் கண்டறிந்திருக் கிறோம். இந்த ஏரிகளைச் சீரமைப்பதும் பராமரிப்பதும் மிக முக்கியப் பணியாகத் தெரிவதால், இவற்றின் மீது உடனடி கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளோம். நீர்நிலைகள் அனைத்துமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுத் துறையினரின் ஒத்துழைப்போடுதான் பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிற சூழலில், அதற்கேற்பத் திட்டமிட்டு அந்த பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

நீண்டகால யுத்தமாகத் தொடரவிருக்கும் இந்தப் பணிகளில், ஏற்கெனவே நாம் உருவாக்கியிருக்கும் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமைப்புகளும் கைகோத் துள்ளன. இந்த வகையில் வண்டலூர் - வாலாஜாபாத் வரையிலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைக் காக்கும் பணிகளில் ‘இந்திய சுற்றுச்சூழலியலாளர்கள் அமைப்பு’ (இ.எஃப்.ஐ), விகடனுடன் கைகோத்து சுழல ஆரம்பித்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும், சூழல் பாதுகாப்புப் பணிகளை தன்னார்வலர்கள் மூலமாக செயல்படுத்திவருகிறது இந்த அமைப்பு.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இ.எஃப்.ஐ அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி, ‘‘ஏரிகள், குளங்கள், ஆறுகள் ஆகியவை நவீன இந்தியாவில் அழிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றன. இந்தச் சுரண்டல் நிறுத்தப்பட வேண்டும். நீர்வழித்தடங்களைக் கண்டறிந்து, அவற்றை மறுமதிப்பீடு செய்து, மீண்டும் பசுமையான நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க இருக்கிறோம். சூழலியலைக் காப்பதில் அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிமுறைகளைப் பின்பற்றி செயல்படுகிறோம். எங்கள் அமைப்பில் தன்னார்வலர்களாகச் சேர்ந்திருக்கும் பலர், இந்த நீர்நிலைகளைக் காப்பதற்கு ஆர்வமுடன் தங்களது உழைப்பை அளித்து வருகிறார்கள். தங்கள் வாழ்நாளின் பெரும் நேரத்தை நீர்நிலைகளைக் காக்க செலவிடுவதற்கு ஆர்வமுடன் உள்ளார்கள்.

இத்தகைய சூழலில், சென்னையின் மழை-வெள்ளப் பாதிப்புகளை உணர்ந்து `வாசன் அறக்கட்டளை’ மூலமாக வாசகர்களுடன் கைகோத்து விகடன் நிறுவனம் தொடங்கியிருக்கும் `நிலம்... நீர்... நீதி!’ திட்டத்தில் தன்னார்வலர்களாக நாங்களும் கைகோத்து செயல்பட இருக்கிறோம்’’ என்று உற்சாகமாகச் சொன்னார். ஏற்கெனவே, சில ஏரிகளைப் பராமரித்துவரும் இ.எஃப்.ஐ அமைப்புடன் இணைந்து, ‘ஏரி சவாரி’ நடத்தப்பட்டுவருகிறது. அதாவது, வண்டலூர், ஒரகடம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு பொதுமக்களை அழைத்துச் சென்று, அவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அவற்றின் தற்போதைய பரிதாப நிலை குறித்தும் நேரடியாக எடுத்துரைக்கப்படுகிறது. பெரும்பாலும் வார இறுதிநாட்களில் இந்த ஏரி சவாரியும், ஏரிகள் சுத்தப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகின்றன. ஏரி சவாரி மற்றும் ஏரிகளை சுத்தப்படுத்துவது ஆகிய நிகழ்வுகள் குறித்து விகடன் இணைய தளத்தில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும்.

நீர்நிலைகளைக் காக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் `நிலம்... நீர்... நீதி’ திட்டத்தின் பணிகள் குறித்தும், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் அவ்வப்போது தங்களுடன் விகடன் குழும இதழ்கள் மூலமாகவும், இணைய தளத்தின் மூலமாகவும் பகிர்ந்து கொள்வோம்.