‘‘தண்ணீர், அரசாங்கத்தின் சொத்து அல்ல!’’

சாட்டை எடுக்கும் ‘தண்ணீர் மனிதர்’

நிலம்...நீர்...நீதி!

வறண்ட பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில், வற்றிக்கிடந்த ஆறுகளை உயிர்ப்பித்து, விவசாயத்தைச் செழிக்கச் செய்துகொண்டிருப்பவர்... ‘தண்ணீர் மனிதர்’ என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங்.

விகடன் உருவாக்கியிருக்கும் நிலம்...நீர்...நீதி இயக்கத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், ஏரிகள், தாங்கல்கள், கால்வாய்கள், ஆறுகள் என்று நீர்நிலைகளையும் நம்மோடு இணைந்து ஆய்வு செய்தார். அதன் முடிவில் அவரிடம் சில கேள்விகளை முன் வைத்தபோது...

‘‘சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் அவற்றின் புறநகர்ப் பகுதிகளில் விவசாயம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இத்தகையச் சூழலில், நீர்நிலைகளைக் காப்பாற்றவும், நீர்ச் சேகரிப்பை முன்னெடுக்கவும் நகர்ப்புற மக்கள் எப்படி முன்வருவார்கள்?’’

‘‘தண்ணீர்தான் உயிர்! தண்ணீர் இருந்தால்தான்... மனிதனின் வாழ்வாதாரம், கண்ணியம் எல்லாம் காக்கப்படும். தண்ணீர் இருந்தால்தான் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க முடியும். ஏற்கெனவே, சென்னைக்கான மொத்த குடிநீரும் வெளியிலிருந்துதான் வருகிறது. இதில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டாலும், சமாளித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், எவ்வளவு காலத்துக்கு வெளியூர்களிலிருந்து சென்னைக்குத் தண்ணீர் கொடுப்பார்கள்? ஒரு கட்டத்தில் பிற மாநிலங்களைப் போல, பிற மாவட்ட மக்களும் போர்க்குரல் கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும்? இந்த உண்மையை உரிய வகையில் உணர வைத்தால், தங்களின் சொந்த குடிநீர்த் தேவைக்காவது, மாநகர மக்கள் நீர்ச் சேகரிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தை உணர்வார்கள்!’’

‘‘இவ்வளவு மழை பொழிந்திருக்கிறது. ஆனால், இதற்குப் பின்னும், பல ஏரிகளில் நீர் நிற்கவில்லையே?

‘‘வண்டலூர் துவங்கி, வாலாஜாபாத் வரை செல்லும் சாலையில் பயணித்து பல ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் எனப் பார்வையிட்டோம். நீர் நிறைந்திருக்கும் ஏரிகளும்கூட முழுக்கொள்ளளவுடன் இல்லை; தூர்வாரப் படாமல் இருப்பது, தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என்று ஆக்கிரமித்திருப்பதுதான் காரணம். இத்தகைய ஏரிகளால் நீரைத் தக்க வைக்கமுடியாது. அதேபோல பல ஏரிகள் பராமரிக்கப்படவே இல்லை என்பதால், பெயரளவுக்கே அந்த ஏரிகளில் நீர் இருக்கிறது.

சென்னை உயிருடன் இருக்க வேண்டுமானால் கூவம், அடையாறு என்று புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலுள்ள நீராதாரங்களைப் பராமரிக்க வேண்டும், மீட்டெடுக்க வேண்டும். இல்லையேல், குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சென்னையின் நிலை மிகமிகப் பரிதாபமாகிவிடும். இந்த முறை தண்ணீரால் தவித்தவர்கள், அடுத்த முறை கொஞ்சம்கூட தண்ணீர் இல்லாமல் தவிக்க வேண்டிய சூழல் வரக்கூடும்’’

‘‘ஆக்கிரமிப்புகள்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்கிறீர்கள். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவை தொடராமலிருக்கவும் உங்களின் ஆலோசனைகள்?’’

‘‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அரசின் கடமை. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள அனைத்து நீராதாரங்களையும் ஆய்வுசெய்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளைத் தெளிவாக வரையறை செய்யும், புதிய அரசாணைகள் வெளியிடப் படவேண்டும். நீர் குறித்த விழிப்பு உணர்வை, நீர்ச்சேகரிப்புப் பணிகளை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும். மாசுபடுத்துபவர்களை, ஆக்கிரமிப்புச் செய்பவர்களை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.’’

‘‘வேலைவாய்ப்புகள்தான் மக்களின் மனதில் பிரதானமாக இருக்கிறது. இத்தகைய வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடியவை தொழிற்சாலைகள்தான். தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்கிற மனோபாவம்தான் மக்களிடம் அதிகமாக உள்ளது. அப்படியிருக்க, நீர்நிலைகளை ஆக்கிரமித்து எழும்பியிருக்கும் தொழிற்சாலைகளை, அடுக்குமாடிக் குடியிருப்புகள், வீடுகள் போன்றவற்றை மக்கள் எப்படி எதிர்ப்பார்கள்?’’

‘‘வளர்ச்சி என்கிற பெயரில் தொழிற்சாலைகள் பெருகுகின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில், நீர் வளங்களைப் பாதுகாப்பதில், மனிதகுலத்தைப் பாதுகாப்பதில், தொழிற்சாலைகளின் பங்கென்ன என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

நீர்நிலைகளைக் காப்பாற்ற, ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக நடந்துவரும் நகர்ப்புற விவசாயத்தையும் காப்பாற்றியாக வேண்டும். உடல்நலனுக்கும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், இயற்கை விவசாயம் அவசியம். ஆர்வமுள்ளவர்கள் இறங்கினால், இயற்கை விவசாயத்திலும், நிறைய வேலை வாய்ப்புக்களை உருவாக்கமுடியும்; சுற்றுச்சூழலையும், பருவநிலையையும் பாதுகாக்க முடியும். அந்தந்தப் பகுதிகளின் மழையளவுக்கு ஏற்ற மாதிரியான பயிர்வகைகளைப் பின்பற்ற வேண்டும். இவற்றின் அவசியத்தை பொதுநல அமைப்புகளும் அரசாங்கமும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் தீட்ட வேண்டும்.’’

வெள்ளத்தைத் திறம்பட சமாளிக்கக்கூடிய முன்னுதாரண அரசுகள் இருக்கின்றனவா?’’

‘‘மும்பைக்குப் பிறகு சென்னை தான் பெரு வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அடுத்து ஹைதராபாத்தில் இது நடக்கும். இங்கெல்லாம், நீர்வழித்தடங்களை, நீராதாரங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் பெருகுகின்றன. இதனால், இவற்றால் வெளியிடப்படும் ‘சிவப்பு வெப்பம்’ அதிகரிக்கும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; நீர்த் தடங்களை, நீராதாரங்களைப் பராமரிப்பது இவைதான் தீர்வுக்கான வழிகள். இவற்றைச் செய்வதன் மூலமும், விழிப்பு உணர்வை உருவாக்குவதன் மூலமும், பீகார், மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் மக்களமைப்புகள், வெள்ளத்தைத் திறம்படச் சமாளிக்கின்றன. அரசுத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபடுகின்றன.

சென்னை உள்ளிட்ட பகுதிகளைப் பொறுத்தவரை பெருவெள்ளத்தை மக்கள் இப்போதுதான் கண்கூடாகப் பார்த்துள்ளார்கள். வெள்ளம் இங்கு புதிது. அதனால் பாதிப்புகளும் அதிகம்! மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அடிக்கடி வெள்ளம் வந்தால்தான், அதன் வீரியத்தை மக்கள் உணர்வார்கள். பத்து ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் வெள்ளம் வரும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. இன்றையப் பருவநிலை மாறுதல்கள் காரணமாக... ஆண்டுக்கு ஆண்டு கூட வெள்ளம் வரக்கூடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.’’

‘‘இன்றைய தாராளமய, உலகமய, நகர்ப்புறமய சூழலில் நீர்நிலைகளைக் காப்பாற்றுவது என்பது நடக்கக்கூடிய காரியமா?’’

‘‘இல்லைதான். ஆனால், நீர்நிலைகளைக் காக்க மக்கள் இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். நீர்நிலைகளுக்குரிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் முயற்சி மூலம் இதை சாதிக்கலாம். வெள்ளத்தைக் காரணமாக வைத்து மட்டுமே இதையெல்லாம் செய்யக் கூடாது. உளப்பூர்வமாகச் செய்யவேண்டும்.

ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ளவர்கள் முயற்சி எடுத்து நீர் பற்றிய கல்வி அறிவைப் புகட்ட வேண்டும். நீர்நிலைகளை மேப்பிங் செய்ய வேண்டும். பள்ளிப் பாடத்திட்டங்களில் நீர்நிலைகள் பற்றிய பாடங்களைச் சேர்த்து குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்பிக்க வேண்டும். இப்போது வந்த வெள்ளத்தை ஆறு மாத காலத்தில் மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால், நீர்நிலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தும்போதுதான்... என்னுடைய ஏரி, என்னுடைய ஆறு என்கிற உணர்வு மக்களுக்கு வரும்.’’

‘‘மக்களைத் திரட்டுவது அத்தனை எளிதான காரியமா?’’

மக்களைத் திரட்டிப் போராடுவது கஷ்டமான காரியமே. ஒரு நாள் வருவார்கள்... ஒரு நாள் வரமாட்டார்கள். ஏன், ஒரு நாள் உங்களுக்கு எதிராகவே திரண்டு நின்று, எதிர்முகாமுக்கு ஆதரவாகக்கூட மக்களில் பலர் போராடக்கூடும். ஏன், ஊரைவிட்டே உங்களை விரட்டி அடிக்கவும் கூடும். ஆனால், ஒரு நாளும் சோர்ந்துவிடக் கூடாது. நம்முடைய பணி... நீர்நிலைகளின் மீது மக்களுக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்டுவதுதான். அதை மக்களுக்குப் புரிய வைக்கும்போது வெற்றியின் வேகம் அதிகரிக்கும்.

இதைத்தான் ராஜஸ்தானில் நான் செய்தேன். 1985-ம் ஆண்டுதான் தண்ணீருக்கான போராட்டங்களை ஆரம்பித்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகே கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை எட்டிப் பார்த்தோம். ஆனால், அதற்குள்ளாகவே ஏகப்பட்ட போராட்டங்கள். முதற்கட்ட வெற்றியை எட்டியபோது என் மீது 370 வழக்குகள் போடப்பட்டன. அத்தனையும் அரசாங்கத்தால் போடப்பட்டவை என்பதுதான் வேதனை. என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு... அரசாங்கத்துக்குச் சொந்தமான தண்ணீரை நான் தவறாகப் பயன்படுத்துகிறேன் என்பதுதான்.

‘‘தண்ணீரை அரசாங்கம் உருவாக்கவில்லை. அது, இயற்கை உருவாக்கிய ஒன்று. எனவே, மக்கள் உள்ளிட்ட உயிரினங்கள்தான் தண்ணீரின் உரிமையாளர்கள். நீர்நிலைகளைப் பராமரிப்பது மக்கள்தான். அப்படியிருக்க, தான் உருவாக்காத ஒன்றுக்கு அரசாங்கம் எப்படி உரிமை கொண்டாட முடியும்’’ என்று நீதிபதிகளுக்கு கடிதம் எழுதினேன். ஒரு கட்டத்தில், ஒரே நாளில் மொத்த வழக்குகளும் வாபஸ் ஆகிவிட்டன. ஆனால், அதற்கான காரணம் எனக்குத் தெரியாது.

என்னுடைய பகுதியில், தண்ணீரில் கைவைக்க அரசாங்கம் மற்றும் தொழிற்சாலைகளை அனுமதிப்பதில்லை. தண்ணீரைக் கொண்டு வருவதற்காக பாடுபடுவது நாங்கள். அதைக் காப்பாற்றி வைப்பது நாங்கள். ஆனால், பயன்படுத்துவது மட்டும் தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கமா... அதனால்தான் அனுமதிப்பதில்லை. தண்ணீரைக் காப்பற்ற துளிகூட முயற்சி எடுக்காத அரசாங்கத்துக்கு அந்தத் தண்ணீரில் எந்த உரிமையும் இல்லை என்று நாங்கள் தைரியமாக எதிர்த்து நிற்கிறோம். இந்த உறுதி இருந்தால்... நீர்நிலைகளைக் கட்டாயம் காப்பாற்ற முடியும்!’’

நன்றி பசுமைக்குழு