நிலம் நீர் நீதி

ஓரு மழை, நம் வாழ்வைப் புரட்டிப்போட்டுவிடுமா? ஒரு மழை, அரசு இயந்திரத்தையே ஆட்டம் காணச் செய்யுமா? ஒரு மழை, இத்தனை மனிதம் துளிர்க்கப் பண்ணுமா? ஒரு பெருமழை, என்னவெல்லாம் செய்திருக்கிறது!

காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா என அண்டை மாநிலங்களிடம் ஆண்டுதோறும் நம் தேவைக்கான நீரைக் கேட்டுப் பெறவே பெரும் போராட்டம் வெடிக்கும். இதோ இப்போது இன்னும் பல ஆண்டுகளுக்குத் தேவையான நீரை நமக்கு ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்தது இந்தப் பெருமழை. இயற்கை வழங்கிய மாபெரும் நீர்க்கொடையை பொக்கிஷமாய் பாதுகாத்துச் சேகரிக்கத் தவறிவிட்டோம். மழைநீர் பயனற்றுப்போனது ஒரு பக்கம் எனில், அது எண்ணிப்பார்க்க முடியாத வரலாற்றுப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீதிகளில் அலைகின்றனர். உயிரிழப்பு, பொருள் இழப்புகளின் உண்மை நிலவரம் மொத்தமாக வெளிவரும்போது, நாம் நிலைகுலைந்துபோவோம்.

இத்தனை இக்கட்டான தருணத்தில் நம்மைக் கைகூப்பி வணங்கவைத்தது இளைஞர் சக்தி... இணைய சக்தி... சமூக ஊடகத்தின் சக்தி. அன்று வரை ஊர் என்ன பேர் என்ன என்றுகூடத் தெரியாத ஆயிரமாயிரம் இளைஞர்கள் எழுந்தார்கள். கணினிகள் முன் ஒரு கூட்டம்... களமாட இன்னொரு கூட்டம். உதவ முன்வருபவர்கள், உழைக்க முன்வந்தவர்கள், உதவிகள் தேடித் தவிப்பவர்கள் என முக்கோணங்களையும் முழுமையாக ஒருங்கிணைக்கத் தொடங்கியதும் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

குடிநீரா... உணவா... உடைகளா... மருந்து மாத்திரைகளா... மாநிலமெங்கும் தகவல்கள் பறந்தன. மாநகரெங்கும் பொருட்கள் குவிந்தன. வீதிவீதியாக உதவும் கரங்கள் நீண்டன. இங்கே போதும்... அங்கே தேவை எனத் தகவல் பரிமாற்றங்களால் கடலூர் வரை படைகள் பறந்தன. மின்சாரம் இல்லாத நேரத்தி்லும் தொழில்நுட்பம் விளையாடியது. இதுவரை இந்தியா பார்த்திராத இந்த இளைஞர் சக்திதான் இனி நமக்கு முன்மாதிரி!

நம் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத இந்த பேரிடர் காலத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் மாபெரும் மனிதாபிமானத்துடன் எதிர்கொள்கிறது. உண்மையான ‘மக்கள் ஆட்சி’ இதுதான். சாதி, மதம், இனம் கடந்து நீளும் உதவிக் கரங்கள் உறுதிப்படுத்துவது இதைத்தான். இனி வரும் நாட்களில் நிவாரணப் பணிகளுக்கான தேவை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். எனவே தன்னார்வலர்கள் மேலும் முனைப்புடன், கூடுதல் மன வலிமையுடன் தொடர்ச்சியாகப் பணியாற்ற உறுதியேற்க வேண்டும்.

ஆனால் இந்த நாட்களில் அத்தனை அரசியல் கட்சிகளின் முகமூடிகளும் கிழிந்தன. யார் யாரோ செய்யும் உதவிகளை வழிமறித்து நிவாரண உதவிப் பைகளில் ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்டும் அருவருப்பான செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் அ.தி.மு.க-வினர் செய்தனர். பசியில் வாடும் மக்களுக்கு சோற்றுப் பொட்டலத்தை வழங்கும் அ.தி.மு.க அமைச்சருக்குப் பின்னால் நின்றபடி, ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஊடக கேமராக்களுக்கு முன் உயர்த்திப் பிடித்தனர். கட்சி மாநாடுகளுக்கு பல லட்சம் பேரைத் திரட்டும் சக்தி படைத்த கழகங்கள், பேரிடர் நேரத்தில் பம்மாத்து காட்டின. பல இடங்களில் அரசியல் பிரமுகர்கள், மக்களால் துரத்தப்பட்டனர். நிகழ்ந்திருப்பது இயற்கைப் பேரழிவு என்றால், இழவு வீட்டிலும் விளம்பரம் தேடும் இவர்கள், இந்த சமூகத்தின் சீரழிவு.

களத்தில் தன்னலமற்றுப் பணியாற்றும் ஒவ்வொருவருடனும் விகடன் கைகோக்க விரும்புகிறான். விகடனின் ‘அறம் செய விரும்பு’ திட்டம் மூலம், மழை வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

நிவாரணம் என்பது இப்போதைய வலிபோக்கும் நடவடிக்கை. ஆனால் இவ்வளவு பேரழிவு நிகழ்வதற்கான அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்வதுதான் நீண்டகாலத் தீர்வுக்கான வழி.

உண்மையில் இந்தப் பேரிடரில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை என்ன? நீர் பாயும் ஆறுகளை, நீர் தேங்கும் ஏரிகளை, நீர் வழிந்தோடும் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டடக் காடுகளாக மாற்றிய கொடுங்குற்றத்துக்கு இயற்கையின் சீற்றம் தந்த தண்டனை இது என்ற பேருண்மையை உணர வேண்டிய தருணம். தனி மனிதர்கள் தொடங்கி அரசு வரையிலும் இந்தப் படிப்பினைகளை மனதில்கொண்டு, திருந்தவும் திருத்தவுமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும்.

முதலில், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் மக்களிடம் பெரும் மனமாற்றத்தை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. இதற்காக நிலம், நீர் தொடர்பான பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, தீர்வின் தடம் நோக்கி நகர வேண்டியிருக்கிறது. லாபவெறிக்காக நீர்நிலைகளைக் கொன்றொழிக்கும் அதிகார, அரசியல் வர்க்கத்தினரை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருபக்கம் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, மறுபக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டெடுப்பது என்ற இரட்டை நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தமிழகத்தின் நலன் காக்கும், தமிழர்களின் சந்ததி காக்கும் இந்த நிரந்தரத் தீர்வுக்கான போரை வீரியத்துடன் முன்னெடுக்கக் களம் இறங்குகிறது நம் விகடன் குழுமம். இதன் முதல் கட்டமாக விகடன் நிறுவனம் சார்பில் ஒரு கோடி (1,00,00,000) ரூபாய் நிதியை வழங்குகிறோம். இது ஆரம்பம்தான். விவரங்கள் விரைவில்! இந்த நீண்ட நெடிய அறப் பணியில் தமிழ் மக்களைக் கரம் கோக்க அழைக்கிறோம்.

இளைஞர்கள்தான் நம் நம்பிக்கை. நிலம் காக்க, நீர் காக்க, நீதிக்கான நெடும்பயணத்தை நாம் இணைந்து தொடங்குவோம். இதற்கு மேலும் தாமதித்தால், நம் பிள்ளைகள் விளையாட ஒரு பிடி மண் இருக்காது. நம் குழந்தைகள் கால் நனைக்க, ஒரு நதி இருக்காது. இது நம் நிலம். இது நம் நீர். இதைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை. யாருக்காகவும் காத்திருக்க வேண்டியது இல்லை. இழந்த இயற்கை வளங்களை, ஒவ்வொன்றாக மீட்டெடுப்போம். இன்றே, இப்போதே, இந்த கணமே செயல்படத் தொடங்குவோம்.

நிலம் காப்போம்! நீர் காப்போம்! நீதி காப்போம்!

வழிகாட்ட... வழிநடத்த வாருங்கள் இளைஞர்களே!